அதிபரின் செய்தி
BD/HALI-ELA TAMIL MAHA VIDYALAYAM (NATIONAL SCHOOL)
மாற்றத்துடன் முன்னேற்றம் காணுவோம்
1965ம் ஆண்டிற்கு முன்பு காலை மாலை என ப/டிக்வெல்ல பாடசாலையில், காலை சிங்கள மாணவர்களும், மாலை தமிழ் மாணவர்களும் கல்வி கற்றனர். 1965 கல்வி சீர்த்திருத்தம் காரணமாக டிக்வெல்ல வித்தியாலயம் சிங்களமயமாக்கப்பட்டது. 1965ம் ஆண்டிற்குப்பின் தமிழ் பாடசாலையின் தேவை கருதி பல தமிழ் பிரமுகர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களுள் மூக்கையா JP, T.M.P.வாசுதேவன், கோ.செல்வராஜ், தங்கவேல் விஸ்வநாதன், ரொஸட் மகாதேவன், ரொக்கதன்ன சந்திர மோகன், மாயழகு பெரியசாமி, P. வேதாந்தமூர்த்தி ஆகியோர் நகரில் காணி கிடைக்காத போது ஹாலி-எல வீரசக்தி விநாயகர் ஆலய காணியை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்தனர். 1986ம் ஆண்டு கட்டிடம் கட்டப்பட்டு; 1982-1988 வரை தளபாடம் இல்லாது திறப்பு விழா இடம்பெறவில்லை. ஒருவாறு தளபாடம் பெற்றுக்கொண்டு 1989.03.20 ம் திகதி ப/ஹாலி-எல தமிழ் வித்தியாலயம் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அப்போது அதிபராக பொறுப்பேற்ற கௌரவ அதிபர் சுப்பையா அவர்கள் பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலையை நடாத்திச் சென்றார். மாணவர் தொகை அதிகரிக்க அதிகரிக்க கட்டிட வசதி போதாமையினால் கொட்டில்கள் அமைத்து கற்றல் கற்பித்தல் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் தற்போது இருக்கின்ற இடத்தில் ஒன்றரை ஏக்கர் காணி ரொக்கத்தனை தோட்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. அதாவது, ஆரம்பப்பிரிவு ரொக்கத்தனை தமிழ் வித்தியாலமாகவும் சிரேஷ்ட பிரிவு ஹாலி எல தமிழ் வித்தியாலயம் எனக் கருதி அரை ஏக்கர் ரொக்கதனை தமிழ் வித்தியாலயத்திற்கும் ஒன்றரை ஏக்கர் ப/ஹாலி-எல தமிழ் வித்தியாலயத்திற்கும் கிடைத்தது. 1989-2002 ம் ஆண்டு வரை சுப்பையா அதிபரின் தலைமையில் பாடசாலை முன்னேற்றப்பட்டது. 2003-2015ம் ஆண்டு வரை கௌரவ லோகேஸ்வரநாதன் அவர்கள் அதிபராக பணியாற்றினார்கள். அன்றைய காலங்களிலும் பல சிரமங்களுக்கு மத்தியில் பாடசாலை வளர்ச்சிப் பாதையில் இட்டுச்சென்றது. 2016ம் ஆண்டு பாடசாலை நேர்முகப்பரீட்சையின் ஊடாக தேர்ந்தெடுக்கப்பட்ட க.சந்திரபோஸ் ஆகிய நான் அதிபராக கடமையேற்று கல்வித்தர அபிவிருத்திக்கு முக்கிய பங்கு கொடுத்து கற்றல் கலாசாரத்தை ஆசிரியர், பெற்றோர், பழைய மாணவர், பாடசாலை சமூகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னேற்றம் கண்டு கொண்டு வருகின்றேன். பாடசாலை அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் கட்டிட வசதிஇ பல வசதிகளுடன் கழுவும் அறை, அதிபர் விடுதி, ஆசிரியர் விடுதி, நூலகம், கற்றல் உபகரணங்கள் விளையாட்டு உபகரணங்கள் மனையியல் கூட உபகரணங்கள், நூலக புத்தகங்கள், மற்றும் கணித அறை போன்ற இன்னும் பல பாடசாலைக்கு தேவையான வளங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு, விசேட அலகுப் பிரிவு 5 மாணவர்களிலிருந்து 20 ஆக உயர்ந்து பல வசதிகளுடன் கூடிய வகுப்பறையும் உபகரணங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அத்தோடு, 13 வருட உத்தரவாதம் அளிக்கப்பட்ட மாணவர்களுக்கு விசேடமான பல வசதிகளுடன் கூடிய இரண்டு வகுப்பறைகளும் அதற்கான Smart Board மற்றும் உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பாடசாலை அபிவிருத்தியடைய தற்போது 1000 தேசிய பாடசாலை வேலைதிட்டத்தின் ஊடாக இன்னும் பல அபிவிருத்தி நடவடிக்கைகளிற்கும் முன்னேற்றத்திற்கும் இவ் 1000 பாடசாலை வேலைத்திட்டம் உந்து சக்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. மாற்றத்துடன் முன்னேற்றம் காணுவோம்.
அதிபர்
க.சந்திரபோஸ்



